ஜீவாவைப் போல் யாரே உள்ளார்
ஊர்நடுவே பழுத்த மரம் மக்களுக்கே
உரியபயன் நல்குகின்ற தன்மையாகப்
பேர்பெற்ற காமராசர் முதல்வராகப்
பெருமையுடன் தமிழகத்தை ஆண்டபோது
சீர்மிகுந்த அரசுவிழா ஒன்றில் பேசச்
சிலரோடு மகிழுந்தில் செல்லும் போதோ
ஆர்வமுடன் சீவாவை அழைத்துச் செல்ல
அவரிருந்த குடிசை முன்னே இறங்கி நின்றார் !
கட்டுவதற்குத் துவைத்திட்ட வேட்டி தன்னைக்
காய்வதற்கு வேலி மீது போட்டிருந்த
சட்டமன்ற உறுப்பினராய் இருந்த சீவா
சற்று நீங்கள் பொறுத்திருந்தால் வருவேனென்றே
எட்டிநின்று உரைத்து வேட்டி காய்ந்தபின்பு
எடுத்துடுத்திக் குடிசைவிட்டு வெளியே வந்தார்
கட்டுமொரு வேட்டியொடு வாழும் செய்தி
காமராசர் அறிந்து நெஞ்சுள் கண்ணீர் விட்டார் !
காந்திமகான் தமிழ்நாடு வந்தபோது
காண்பதற்கு வந்த சீவாதம்மைப் பார்த்துச்
சாந்தமூர்த்தி சொத்துளதா என்று கேட்கச்
சட்டென்றே இந்தியாதான் என் சொத்தென்றார்
பாந்தமுடன் சீவாவைத் தழுவிக் காந்தி
பாரதத்திதின் நல்சொத்தே நீதான் என்றார்
காந்தியைப் போல்வாழ்ந்த சீவாதியாகி போல
காணவின்றோ அரசியலில் யாரே உள்ளார் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.