காலச்சுழற்சி
தாத்தா
பயன்படுத்தியதெல்லாம்
இன்று அப்பாவின்
வசமாகிவிட்டது.
எல்லோரையும் சுழற்றி
ஓரிடத்தில் அமர வைக்கிறது
காலச்சக்கரம்.
படுக்கையறையிலிருந்து
பக்குவமாய்
வராண்டாவில்
பாய் விரித்துக் கொள்கிறது
வயோதிகம்.
அதற்குத் தக இசைகிறது
முதுமை மனசும்.
நிறைவுற்ற பணியால்
எதிலும் நாட்டமில்லை
பெருத்த நட்டமும் இல்லை
என் தாத்தா
கோடிட்ட இடத்தை
தாத்தாவான என்னப்பா
அதை
நிரப்பிக் கொண்டிருக்கிறார்.
என்னப்பா
எனக்காக நிரப்பாமல்
விட்ட வெற்றிடங்களை
நான் நிரப்பியாக வேண்டும்.
எனது படுக்கை
வராண்டாவிற்கு வரும்
காலம் வரை நான்
காத்திருக்கப் போவதில்லை.
என் கடன்
பணி செய்து கிடப்பதே....!
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.