மாற்றம் தருக...!
கருவில் உருண்டு திரண்ட அணுக்கள்
கலந்து இணைந்து உருவான உயிர்கள்
ஏன் குறைவாய் செதுக்கி விட்டதோ
அமைதிப் பயணம் கடந்த பின்பு...
அன்னை துடித்தவுடன் வந்து இறங்கி
அழுகைகள் வாழ்வு முழுதும் தொடருமோ
ஆண்டவன் குறைகள் எங்களுக்குள் பதிந்ததோ
மாற்றங்கள் மானுடத்தில் ஏராளம்
மானுடங்கள் மனிதத்தைத் தொலைத்தது தாராளம்
எங்கே சென்றாலும் எள்ளல் மொழியோ
மனங்கள் எல்லாம் வஞ்சகத் தனமோ
விழும் மனிதனை நோக்கும் சுவைதானிது...
மாற்றாய் பிறந்ததால் மாற்றம் வேண்டினோம்
சிற்றெறும்பு முதல் யானை வரை
சிவனை வழிபட்டதாம் புராணங்கள் பேசுது
அந்தச் சிற்றெறும்புகூட புனிதம் ஆகையில்...
நாங்கள் என்ன செய்தோம் கூறுகவே
நன்றாக உள்ளவன் பிச்சை கேட்கிறான்
மாறிய நாங்கள் சுயசார்பைக் கேட்கிறோம்
கல்லைக்கூட செதுக்கி இறையாக்கும் போது...
உயிருள்ள எங்களை ஏன் வெறுக்கிறீரோ
ஏகபாதம் கொண்டவனே நீயும் மௌனமா?
மாற்றம் தருக மாற்றுத்திறனாளி எங்களுக்கு
ஏளனம் நிறுத்தி ஏவெனாச்சரியம் தருவோம்...
- ப. வீரக்குமார், திருச்சுழி.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.