அவள் இன்னும் மலரவில்லை!
வீட்டின் முற்றத்தில் எட்டிப் பார்க்கிறது
செம்பருத்திப் பூவொன்று.
யாருடைய வருகைக்காக என்றில்லாமல்
ஒவ்வொரு நாளும் மலரும்.
இம்முறையேனும் வருகிறவன்
பூவள்ளிப் பருகவேண்டும்.
நாள்தோறும் நீரூற்றிப் போகும்
அஞ்சலைக்குத் தெரியாது பூவின் ரகசியம்.
அவள் ஒருமுறை கூடச் சூடியதில்லை.
பூக்கள் மலரும் வசந்த காலமொன்றிலும்
பூத்துச் சிரித்தது செம்பருத்திப் பூ.
அஞ்சலைக்கு அது வசந்த காலம் இல்லை.
மறுநாள் உதிர்ந்த பூக்களை
தூற்றிப் பெருக்கிற அஞ்சலையிடம்
பூக்கள் ஏன் உதிர்ந்தன என்று கேட்டு விடாதீர்கள்.
அவள் இன்னும் மலரவில்லை.
- கவிஞர். வதிலைபிரபா, வத்தலக்குண்டு.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.