நேர் நின்றால் இருக்க மாட்டீர்
காதலிக்க மறுத்தாலோ அமிலத்தாலே
கருக்குகின்றீர் புகழ்ந்திட்ட மதிமகத்தை
காதலித்தோன் வேறு சாதி என்றபோது
கண்முன்னே வெட்டுகின்றீர் துடிதுடிக்க !
வாதங்கள் புரிந்துண்மை எடுத்துரைத்தால்
வார்த்தைகளில் அவதூறு பரப்புகின்றீர்
மீதமென்ன கண்களிலே உடை கிழித்து
மிருகமென மின்னுடலை நக்குகின்றீர் !
சிறுகுழந்தை என்ற போதும் பெண்ணென்றாலோ
சிறுநீரின் துவாரத்தைக் கிழிக்கின்றீர்கள்
எறும்புடலில் ஊர்வது போல் கைகளாலே
எடுத்தணைத்துத் தடவுகின்றீர் மார்பிடத்தை !
உறுப்புக்கள் என்ன நீங்கள் தின்பதற்கா
உடலினிலே இயற்கையன்னை படைத்தளித்தாள்
அறுவடைக்கு முற்றாத நெல்லென்றாலும்
அறுக்கின்றீர் அடுத்தவீட்டு விளைச்சலென்றே !
பொருள்களினை விற்பதற்கும் காட்சியாக்கிப்
பொழுதெல்லாம் எம்முடலைக் காட்டுகின்றீர்
விருப்பந்தான் இருந்தாலும் இலையென்றாலும்
விளக்கணைத்தால் உடன்படுக்கப் பணிக்கின்றீர்கள் !
வருவாயை மதுவிற்குக் கொடுத்துவிட்டு
வளைகரத்தை ஒடித்தெட்டி உதைக்கின்றீர்கள்
நெருப்பாக எழுமுன்னே திருத்தம் கொள்வீர்
நேர்நின்றே எதிர்த்திட்டால் இருக்கமாட்டீர் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.