வேழச் சகோதரன்
துவாதச சேத்திர சியாமளா
ஐம்பத் தொன்றில் நீ நிலா
மாதவன் சகோதரி
எனை நீ ஆதரி...
தாட்சாயிணி வடிவில்
தணலில் விழுந்து கொண்டு
இறைவனை வெகுந்தெழச் செய்தாய்,
அங்கயற் கண்ணியா யிங்கிருந்து,
ஆறுதலைக் காட்ட வைத்தாய்,
இம்மையில் நன்மையுண்டு
யாருக்கு? − மறுமை
மலராதபடி இச்சேய்க்கு
கன்னி தேசத்துத் தாயே!− இவ்
வுக்கிர பழையனுன் சேயே!
மறந்தாயோ! மயக்கங் கொண்டாயோ!
வீரனாய் விண்முட்டும் வீரமகன்
சோமனாய் ஒளிகூட்டும் மால்மருகன்
மாறனே! எனை நெருங்காதே!
நிமலன் மகனெனத் தெரியாதோ?
வாழ்க்கை எல்லாம் பொய்யென்று,
வாய்மை தப்பியச் செயலென்று,
வான மேவியகலி மேகமென்று,
கருதிய எந்தன் கருத்து மெய்யோ!
கிளியை ஏந்திக்
கிறுக்கன் மகனென்றாய்
பச்சை உடலில்
பாசத்தை மூடி வைத்தாய்
பாசமென்பது தெரிய வைத்தாய்
பல்லவியிலே எல்லாம் புரிய வைத்தாய்
மாயையில் கட்டுண்டு,
உன்னால் மறந்து
மனதுள் வெட்டுண்டு
சத்தியமே!
உன் சலங்கை ஒலி
சரித்திரமே!
எந்தன் யோகமொழி
மாணிக்கத்தில் உதித்தவன் − உன்
மார்பகத்தில் ஜீவ அமுதுண்டு
மாலால் வளர்ந்து,
பெரும் மலையாய் நிமிர்ந்து
தந்தை அருளால் தமயன் வழிநடந்து
விந்தைகள் புரிந்தேன் ஒரு யுகத்தில்
அன்னவாகனம் மருளும்
அன்பின் தம்பி நான்
வேழத்தின் சகோதரன் நான்.
- ப. வீரக்குமார், திருச்சுழி.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.