கடிதங்களில் உறவாடுவோம்...!

எங்கோ இருக்கும் நம் பெற்றோர்கள், நண்பர்களின் உலகத்தை
நம் கையில் கொண்டு வந்து சேர்த்த மாயை இந்தக் கடிதம்;
அன்பு பாசத்தோடு உள்ளங்களையும் பரிமாறிக்கொள்ள உதவிய
ஒரு புரிந்துணர்வு நடைமுறை தான் இந்தக் கடிதம்;
எழுதவோ படிக்கவோ இயலாத தாய், தந்தை பற்றி
இயற்கை கொண்டு வந்து சேர்த்த அழகான சுமை அது;
காற்றில் அலைந்து திரிந்து கரைந்து போன வாழ்க்கையின்
மிஞ்சிப்போன பரஸ்பர உந்துதல் இந்தக் கடிதம்;
மாதம் தவறாமல் அனுப்பும் இந்தக் கடிதங்களின் தொகுப்புதான்
அன்றைய காதலர்களின் மௌன உரையாடல்;
இப்பொழுது படித்தாலும் கடிதம் சுமந்து வந்த
ஈரம் மாறாத கவிதை அழகுதான்;
உறவினர்களின் இறப்பு தீர்மானிக்கப்பட்டதை அறிந்து அழுதது
செய்தி பரிமாறிய தந்தியோடுதான்;
எல்லாக் கடிதத்திலும் தவறாமல் இடம் பெறும்
வேளாவேளைக்குச் சாப்பிடனும்,
சனிக்கிழமை எண்ணெய்க்குளியல் போன்ற
அம்மாவின் அக்கரையான அந்தக் கண்டிப்புகளுடன்...
எவ்வளவு போராடியும் எப்படியும் நனைந்து விடுகின்றது
அம்மாவின் பாசத்தைக் கடிதங்கள் விவரிக்கும் போது;
தவணைமுறையில் பெற்றோர்களின் முகம் பார்க்க வைத்து
நம்மை மலர வைப்பதும் கடிதப் போக்குவரத்தில்தான்;
இன்றுவரை அம்மாவைப்போல
ஆத்மார்த்தமாக அன்பையும் உணர்வையும்
தெரியப்படுத்திய கடிதங்களும் அதன் வார்த்தைகளும்தான்;
எத்தனை வசதிகள் தொழில்நுட்பம் கொடுத்தாலும்
மகன் எழுதிய கடிதம் மட்டுமே அம்மாவிற்குத் துணை;
மலிந்துபோன நாகரீகத்தின் உச்சம்
கடிதங்களோடு மறந்துபோன அன்பும் நம் பாசமும்;
எவ்வளவு வறுமையிலும் விடுதியில் தங்கியிருக்கும் மகனுக்கு
தவறாமல் வந்து சேர்கின்றது
அப்பாவிடமிருந்து கடிதமும் கொஞ்ச பணமும்;
பின்னாளில் மகனிடமிருந்து ஏழாம் தேதி வரும் கடிதத்திற்கு
ஒன்றாம் தேதி முதல் வாசலில் காத்திருப்பது அப்பாவின் பாசம்;
கிராமங்களுக்கு எல்லாம் தூதுப்புறாவாக இருந்தது
தபால்காரரும் அவர் கொண்டு வரும் கடிதங்களும்தான்;
வெளியூரில் இருக்கும் மகனையும் அவன் உழைப்பையும்
பாமர மக்களுக்கு எடுத்துச் சொல்வது
தபால்காரரின் பழைய மிதிவண்டிச் சத்தமும்
அவர் படித்துக்காட்டும் கடிதம் தாங்கிய சேதியும்தான்;
எத்தனை அவதாரம் கடவுள் எடுத்தாலும்
இன்றுவரை கிராமத்து அம்மாக்களுக்கு கடவுள்
மகனின் கடிதத்தை மாதம் தவறாமல்
அவளிடம் சேர்க்கும் தபால்காரர்கள்தான்;
கடிதங்களோடு நம் பாசத்தையும் வெளிப்படுத்துவோம்
அலைபேசியையும் மின்னஞ்சலையும்
சற்று மறந்து கடிதங்களில் உறவாடுவோம்...!
- முனைவர் ச. சுரேஸ்குமார், கிருஷ்ணன் கோயில்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.