யாரோவாகிப் போன அவள்
புத்தகப்பை தோள்மாட்டி மழலை பேசிப்
புதிதாகப் பள்ளிக்கு வந்தவள்தான்
சித்திரங்கள் பலகையிலே வரைந்து காட்டிச்
சிரிப்புடனே என்னருகில் அமர்ந்தவள்தான்
பத்திரமாய்க் கமர்கட்டை எடுத்து வந்து
பாசமுடன் நான் கடிக்கத் தந்தவள்தான்
முத்திரையாய் நட்புதனைப் பதித்து நெஞ்சுள்
முன்பருவம் என்னுடனே படித்தவள்தான் !
கண்கொள்ளாக் காட்சியாகப் பருவம் பூத்துக்
கவின் கொஞ்சும் எழிலாக மிளிர்ந்தபோது
பண்ணாக அவள் குரல்தான் இனிமையாகிப்
பசுஞ்சோலை குயில் போல ஒலித்தபோது
விண்முகிலின் இடைமறைந்த நிலவைப் போல
விட்டென்னைப் பிரிந்துயர்ந்த கல்வி கற்கக்
கண் மறைந்தே ஊர்மாறிச் சென்றதாலே
காலத்தால் யாரோவாய்க் கனவாய்ப் போனாள் !
எங்கெங்கோ அலைந்து நானும் அனுபவங்கள்
எத்தனையோ பெற்றின்று முதுமை தன்னில்
தங்கத்தாய் மடியான சொந்த ஊரில்
தாள் பதித்த போதெழுந்த உணர்வைப்போல
மங்கலமாய் ஊர் நடுவில் நின்றிருக்கும்
மாக்கல்வி தந்த பள்ளி கண்டபோது
எய்கேயோ போன அவள் நினைவுவந்தே
என்னுள்ளே பரவியதை எப்படிச் சொல்வேன் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.