பால்ய நட்பும்... பிரிவும்...
ஒரு தேநீரை
நானும் என் நண்பனுமாய்
ஒன்றாய்க் குடித்த
காலங்களுண்டு.
அரைத் தட்டுப் பிரியாணியை
இருவரும் உண்டு களித்த
நாட்களுமுண்டு.
ஒரு பழத்தை
பச்சாதாபம் பாராமல்
இருவரும் கடித்து
சுவைத்ததுண்டு.
என் முதுகில் அவனும்
அவன் முதுகில் நானுமாய்
சாய்ந்தபடி எங்களை
நாங்கள் ஆசுவாசப்படுத்திய
நேரமுண்டு.
என் மடியில்
அவன் உறங்கியது போலவே
அவன் மடியில் நான் கழித்த
நாட்களுமுண்டு.
என் கன்னத்தில் வழிந்த
கண்ணீரை
நட்பின் இழையோடு
அவன் விரல்கள் ஆறுதலாய்
துடைத்ததுண்டு.
வருடத்திற்கு
இருமுறையென எங்கள்
பிறந்த நாளைக் கொண்டாடி
மகிழ்ந்ததுண்டு.
இப்படிப் பாசாங்கற்ற எங்கள்
பால்ய கால நட்பினை
இரண்டாய் கூறுபோட்ட
அந்தப் பணப் பரிவர்த்தனையை
சபித்திடாமல்
இன்றும்
நகர்வதில்லை நாட்கள்
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.