சொல்லாத காதல் கதை...

மகள் லாவண்யாவை
தினமும் இரவில்
கதைச் சொல்லி தூங்க
வைக்கப் பழக்கப்படுத்தியது
நான்தான்.
என் கதையின் நாயகி
எப்போதுமே நிர்மலா தான்.
அதுகுறித்து இன்றுவரை
என்னிடம் எதுவுமே
கேட்டதில்லை லாவண்யா.
நிர்மலா என் கல்லூரி காதலி
என்பதை
உங்களுக்கும் என் மகளுக்கும்
நான் தெரிவிக்கும்
முன்பே
இதை மதுமிதா அறிவாள்.
நிர்மலாவின்
நெருங்கிய தோழி மதுமிதா.
மதுமிதா லாவண்யாவின்
அம்மா என்பதால்
என் மனைவி மதுமிதா என்பதில்
உங்களுக்கு சிறிதும் ஐயம் எழாது.
நிர்மலாவின் கதையை
பாதி கூட கடந்திருக்க மாட்டேன்
அதற்குள் உறங்கிப் போவாள்
மகள் லாவண்யா.
இப்படியே
பல ஆண்டுகள் உருண்டோடிய
நிலையில்தான்
லாவண்யா என்னிடம்
தினேஷின் கதையைச் சொல்லி
என்னைத் தூங்க வைக்க
முற்பட்டாள்.
அவளைப் போலத்தான் நானும்
பாதி கதையைக் கூட
சொல்லி இருக்க மாட்டாள்
அதற்குள்
உறங்கிப் போவேன் நான்.
லாவண்யா கதையின்
நாயகன் தினேஷ் ஏன் என்பது
எனக்கு
விளங்காமல் இருந்தாலும்
உங்களுக்கு
நிச்சயம் புரிந்திருக்கும்.
லாவண்யாவிற்கு
நிரஞ்சனை வரன்
பார்க்கப் போன போதுதான்
நிர்மலா கதையின் முடிவையும்
தினேஷின் காதலின் முடிவையும்
நிரஞ்சன் சொல்லாமலேயே
நானும் லாவண்யாவும்
புரிந்து கொண்ட நிலையில்
ஏமாளியாய் நிற்கிறான்
மாப்பிள்ளை நிரஞ்சன்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.