காலைக் கீற்று
சின்ன சின்ன
வண்ணக்குயில்
கொஞ்சிக் கொஞ்சி
கூவுதம்மா...
புதிதாக ஆனந்தம்
புதிதாக ஆரம்பம்
மாலைச்சூடி
வாழ்த்துதம்மா...
இயற்கை இயற்றிய
தேனூற்று
காலை பனியும்
மொட்டு மலரும்
நேரமும்
வண்டு வசந்தம்
பாடும் காலை
நேரமும் வண்ண
வண்ண பறவைகளின்
ரீங்காரமும்
பசுமையின்
தடாகத்தில் தாமரையும்
எங்கிருந்தோ இசைக்கும்
குரலிசையும் மனதில்
தில்லானா பாடுகிறது...
மார்கழிக்கு முன்பே
மலர்ந்திருக்கும்
பூசனிப்பூ புன்னகையோடு
செங்கதிரோனின்
கதிருக்கு இசை
மீட்டும் நெற்கதிரின்
சலசலப்பும் பக்குவமாக
பக்கத்து வரப்பு
கரும்பும் கதைபேசிக்
கொள்கிறதே மௌனமாக...
கம்மாய்க் கரை
ஓரமான தென்னையும்
அதில் வசிக்கும்
தூக்கனாங் குருவியும்
காகத்தோடு
கரைந்து கானம்பாட
அழைக்கிறது...
குயிலென நினைத்து
பட்டுவண்ண பல
பூச்சிகளும் மெட்டுகட்டி
நாட்டியமாடுகிறதே...
விடியலில் ரசித்த வண்ணம்
ஒரு பயணம்...
- சசிகலா தனசேகரன், திருவண்ணாமலை

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.