மரபாய் வந்த மாண்பு
உடன்பிறந்த அண்ணனினை அரச னாக்க
உரைத்திட்ட சோதிடத்தைப் பொய்யாய் ஆக்கி
அடலேறாம் இளங்கோதான் துறவை யேற்றே
அருஞ்சிலம்பு காப்பியத்தை நமக்க ளித்தான்
தடம்மாறிப் போகாமல் கட்ட பொம்மன்
தமயன்தான் உயிர்தன்னைக் காப்ப தற்கே
உடன்பிறந்த ஊமைதுரை உயிரை ஈந்தே
உயர்வாக வரலாற்றில் இடம்பி டித்தான் !
இலங்கைமன்னன் இராவணனை எச்ச ரித்த
இளவல்போல் துரியனுக்கோ அமைய வில்லை
கலங்காமல் சோதனைகள் ஏற்றுக் கொண்டு
கட்டுடனே பாண்டவர்தாம் இருந்த தாலே
சலசலப்பே இல்லாத குடும்ப மாகச்
சாயாமல் அனைத்திலுமே வெற்றி பெற்றார்
பலமிதனை உணர்ந்துகொண்டால் பகைமை யில்லை
பாசத்தால் தோற்றோறென் றெவரு மில்லை !
வரலாற்றில் நாம்படிக்கும் உடன்பி றப்பின்
வற்றாத பாசமின்றும் உள்ள திங்கே
சரம்சரமாய்க் கண்ணீரை வரவ ழைத்த
சகோதரத்துக் காவியமாம் பாச மலர்போல்
கரமணைக்கும் பாசமுடன் இருப்ப தாலே
கலையாமல் உள்ளதின்னம் கூட்டுக் குடும்பம்
வரமாக நாம்பெற்ற பண்பாட் டாலே
வாழ்கின்றோம் ஒற்றுமையில் இன்ப மாக !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.