யாருக்கு ஓட்டு போடுவது?
கூட்டமாய் வந்த
ஆளும் கட்சிகாரர்
காஷ்மீர் சால்வையை
என் தோளில் போட்டு
ஓட்டு கேட்கிறார்.
பரிவார படைகளோடு வந்த
எதிர்க் கட்சிக் காரர்
பளபளக்கும்
சரிகைத் துண்டினை
என் கழுத்தில் போட்டு
ஓட்டு கேட்கிறார்.
மிடுக்கோடு வந்த
வேறொரு கட்சிக்காரர்
கட்சித் துண்டினை
எனக்கு கம்பீரமாகப் போர்த்தி
ஓட்டு கேட்கிறார்.
பவ்யமாக வந்த மற்றொரு
கட்சிக்காரர் காலில் விழுந்து
ஓட்டு கேட்கிறார்.
மெத்த படித்த
சுயேட்சை வேட்பாளர்
சொற்ப
மனிதர்களோடு வந்து
என் கரம் பிடித்து குலுக்கி
ஊருக்கு உழைக்க
ஒரு வாய்ப்பு தரும்படி
ஓட்டு கேட்கிறார்.
யார் எப்படி வந்து கேட்டாலும்
யாருக்கு
ஓட்டு போடுவதெனும்
தீர்க்கமான முடிவில்
எந்தவொரு குழப்பமும்
இல்லாமல் இருக்கிறேன்
நான்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.