இல்லாத ஒன்றை நினைவுகூறல்
பெட்டிக்கடை ஒன்று
அந்த முச்சந்தி திருப்பத்தில்
பல வருடங்களாக இருந்தது.
அந்தக் கடைக்காரர்
மிகவும் பரிச்சயமானவர்
நல்ல அபிமானியும் கூட;
அவர் பழகும் நேர்த்திக்காகவே
அந்தக் கடைக்கு அடிக்கடி
நான் போவதுண்டு.
அந்தக் கடைக் குறித்து வினவும்
உங்களின் மனக்குரல்
எனது செவிகளில்
துல்லியமாய்க் கேட்கிறது.
நானதைச் சொல்லும் பட்சத்தில்
அந்தக் கடை குறித்தும்
கடைக்காரர் குறித்தும்
நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.
தற்போதங்கு
இல்லாதவொன்றைக் குறித்து
சொல்வதால்
ஆகப்போவது ஒன்றுமில்லை.
எனினும்
உங்களிடம் சொல்லிக் கொள்கிறேன்.
நீங்களந்த முச்சந்தியைக்
கடக்கும் தருணம் நானும்
அந்தக் கடையும், கடைக்காரரும்,
சில கணங்களேனும்
உங்கள் மனத்திரையில்
ஊடாடிப் போவோமெனில்
அஃதே இக்கவிதையின்
ஆகப்பெரும் சிறப்பு...!
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.