அந்நாளே திருநாள்
செட்டியென்றும் கவுண்டனென்றும் சாதி யின்றிச்
செப்புகின்ற கிறித்திந்து முசுலீ மின்றி
நட்டுகொடி தலைவர்கள் புகழைப் பாடி
நாய்களாகும் கட்சிகளின் சுவடு மின்றிக்
கட்டியாண்ட ஆங்கிலத்தின் அடிமை விட்டுக்
காட்டுகின்ற சங்கநூல்கள் மானத் தோடே
அட்டியின்றித் தமிழனாக மாறு கின்ற
அந்நாளே திருநாளாம் தமிழர் கட்கே !
தப்பின்றி நாடுதனை ஆட்சி செய்யத்
தக்கவழி சொல்கின்ற தகைமை நூலாம்
முப்பாலில் உலகத்தை நெறிப டுத்தும்
முக்காலக் கருத்துகளைக் கொண்ட நூலாம்
எப்படிநாம் வாழவேண்டும் என்று ரைத்தே
ஏற்றபுகழ் பெறவழியைக் காட்டும் நூலாம்
அப்பெருமை திருக்குறளை நாட்டு நூலாய்
ஆக்குநாளே திருநாளாம் தமிழர் கட்கே !
இலக்கணங்கள் ஐந்துவகை இயற்றி வைத்த
இலக்கியங்கள் அகம்புறமாய் எட்டு பத்து
பலவகையாய்ப் பரணிஉலா காப்பி யங்கள்
பார்வியக்கும் அறிவியலின் கருத்தி ருந்தும்
உலவுகின்றார் தமிங்கிலராய் மானம் விட்டே !
உயர்தமிழைக் கல்வியாட்சி நீதி மன்றில்
நிலவுமொழி என்றாக்கும் அந்த நாளே
நிறைதிருநாள் தமிழர்க்கே! ஆக்க வாரீர்!
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.