இயற்கையின் பரிசு....!
வண்ணங்களை அணிந்து
வலம் வரும்
பட்டாம்பூச்சியைப் பிடிக்க
விழைகிறாளவள்.
விரல்களில்
அகப்படாது தப்பிக்கும்
நேர்த்தியை
கற்று வைத்திருக்கின்றன
பட்டாம்பூச்சிகள்.
பட்டாம்பூச்சியின்
சிறகசைப்பும்
அவளின்
இமையசைவுக்குமான
போட்டியில்
அவள் இமையசைவுக்கே
முதல் பரிசு.
ஒவ்வொரு வண்ணங்களையும்
அவள் அள்ளிப் பூசியதில்
நிறங்களற்று கிடக்கிறது
மழைக்கால வானவில்.
பட்டாம்பூச்சி பிடிப்பதில்
அவள் தோற்றுப் போனாலும்
நெஞ்சு வழியவழிய
நிறங்களின் கூடாரமாய்
ஒரு பூஞ்சோலையை
அவளுக்குப் பரிசளிக்கிறது
இயற்கை...!
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.