கரோனாவிற்குப் பணிந்த மானிடன்
கதிரவனும் வந்திட்டான் என்றும் போல
காற்றுகூட வீசியது நேற்றைப் போல
உதிட்டாள் இரவினிலே நிலவுப் பெண்ணாள்
உதிராமல் மின்னியது விண்ணில் மீன்கள்
சதிராடி வெற்பிருந்தும் அருவி கொட்ட
சலசலத்தே ஓடியது நதியில் நீரும்
புதிதாக எதுவொன்றும் தாக்க வில்லை
புரியாமல் இவையெல்லாம் திணற வில்லை !
நிற்கின்ற மரம்அஞ்சி சாய வில்லை
நீண்டகிளை அமர்ந்தபுட்கள் பதுங்க வில்லை
சற்றும்மனம் நடுங்காமல் குரங்கு தாவ
சாலையோரம் நாய்களுமே நிமிர்ந்து நிற்க
புற்றிருந்தும் பாம்புதலை நீட்டிப் பார்க்கப்
புல்மேய்ந்து மாடுகளும் மகிழ்வில் துள்ளச்
சற்றுமிவை கிருமிகள்தாம் வந்து தாக்கிச்
சாவுவரும் எனவொளிந்து மறைய வில்லை !
வென்றுவிட்டேன் இயற்கையினை! விஞ்ஞா னத்தால்
விண்ணேறிப் பிறகோளில் காலை வைத்தேன்
பன்னூறு புதுக்கருவி படைத்த ளித்தேன்
பார்படைத்த கடவுளாக உயர்ந்து விட்டேன்
என்றேதான் தலைகனத்து மனிதன் இங்கே
எல்லாமும் தனதென்றே குதித்தோன் இன்றோ
சின்னதொரு கரோனாவிற் கஞ்சி யஞ்சி
சிதைகின்றான் தோல்விதனில் தலைகு னிந்தே !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.