நாய்களும் நானும்...
சமீபகாலமாய் நாய்கள்
என்னைப் பின்தொடர்கின்றன.
ஒன்று இரண்டிலிருந்து விரிந்து
ஐந்து ஆறெனவும் தொடர்கின்றன.
விரட்டினால்
வாலாட்டி குழையுமே தவிர
என்னைப் பார்த்து குரைத்ததில்லை.
தெரியாத பழக்கமில்லாத
இடங்களுக்குச் சென்றாலும்கூட
அங்கும்
என்னைப் பின்தொடர்கின்றன
நாய்கள்.
எனினும் ஒரு நாய் கூட
அறிமுகமற்ற மனிதரென்று
என்னைக் கடிக்கவோ
துரத்தியதோ இல்லை.
அப்படி
பின்தொடரும் நாய்களுக்கு
ரொட்டி வாங்கிப் போடுகிறேன்.
இந்தச் சம்பவம் குறித்து
நான் வழக்கமாய் செல்லும்
சிவனாலய அர்ச்சகரிடம்
சொன்ன போது
காலபைரவருக்கு
ஆறு தேய்பிறை அஷ்டமியில்
விளக்கு போடும்படி
ஆலோசனை வழங்கினார்.
அதன்படி செய்து முடிக்க
இப்போதும்
என்னைப் பின்தொடர்ந்து
கொண்டுதான் இருக்கின்றன
நாய்கள்.
பின்பொரு நாள்
பார்வைக் கோளாறு
சம்பந்தமாக கண் மருத்துவரை
சந்திக்க
இரண்டு கண்களிலும்
புரை இருப்பதாகவும்
அதற்குடனே அறுவை சிகிச்சை
அவசியமென்றும் அறிவுறுத்த
சிகிச்சை முடிந்து
அடிக்கடி வெளியே செல்கிறேன்.
என் பார்வைக் கோளாறு
முற்றிலுமாய் நீங்க நாய்கள்
என்னைப் பின்தொடர்வதை
இப்போது
அறவே நிறுத்திக் கொண்டன...!
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.