ஆயுள் தண்டனை
விசாரிக்க வேண்டிய விதத்தில்
விசாரிக்காத அதிகார
மனிதர்களின் சதிவலையில்
குற்றம் சுமத்தப் பட்டவனாகிறான்
ஒரு நிரபராதி.
குற்றம் சுமத்தியவர்களின்
சட்டைப்பை தப்பிக்க முயற்சிக்கும்
குற்றவாளியால் நிரம்பி வழிகிறது.
இதனால் குற்றம் சுமத்தப்பட்ட
நிரபராதிக்கு ஏகப்பட்ட இழப்பு.
இதுநாள் வரை
சிறையில் தனியொருவனாய்
புலம்பிக் கொண்டிருந்தவனுக்கு
துணைக்கொரு ஆளின்று
கிடைத்தாயிற்று.
இனி இவன் புலம்பலை
சிறையின் சுவர்களோடு
புதிதாய் நுழைந்த குற்றவாளியோ
வலிய குற்றம் சுமத்தப்பட்ட
நிரபராதியுமாகியவனும்
கேட்டறியக் கூடும்.
புதிதாய் வந்தவனின்
குற்றம் குறித்து கேட்டறிய எனக்கு
விருப்பமில்லை.
அவன்பால் விளங்காத பரிதாபமே
பற்றிக் கொள்கிறது.
இவர்களே இவர்களுக்கு
மாறிமாறி ஆறுதல் சொல்லி
தேற்றிக் கொள்ளக் கூடும்.
காது கேட்காத வாயும் பேசாத
சிறையின் சுவர்கள்
இனி விம்மி அழமட்டுமே செய்யும்.
இந்த அழுகைச் சத்தம்
சிறைச்சாலையின்
மதிற்சுவரினைத் தாண்டி
குற்றம் சுமத்திய சதிகாரர்களின்
செவிகளில் ஓலமாய்
ஒலித்துக் கொண்டே இருக்கும்
என்றைக்கும் ஆயுள் தண்டனையாய்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.