அந்த எழுதுகோல்

தெருவெல்லாம்
கடைகள்...
விடிய விடிய
வண்ண விளக்குகள்...
அது திருவிழாவின்
அவதாரம்!
பார்த்து மகிழ்வை
கோர்த்துவர
எத்தனை எத்தனைக்
கூட்டம்!
காட்சிப்படுத்தலில்
மனமெல்லாம் ஆட்சி
அத்தனை பொருட்கள் மீதும்!
மீட்சி பெற முடியாது...
போன ஆசைக்கு
வாங்கிக் கையோடு
கொண்டு போகும் பொருள் சாட்சி!
தேடுதலில்
தேர்ந்த ஒரு தேடல் கண்ணில்!
கவிதையாய் என்னில்...
எழுதுகோல் மீதுள்ள
காதலில்
மேய்ந்த கண்!
முழுக்க முழுக்க
எழுதுகோல் மீது!
குட்டியாய் ஒன்று!
காந்தி தொலைத்துத்
தேடிய குட்டி பென்சில் போல!
இரண்டு தலையுடன்
ஒன்று!
ஊதாவும் கருப்பும்
வைத்து
உதார் விடவோ...
ஊதாவும்
சிவப்போ பச்சையோ
வைத்து...
ஆளுக்கு முன்
ஆசிரியரிடம் நீட்டி...
வகுப்பில் கெளரவம்
வாங்கித் தரும்படியாம்....
காவல் துறை... லத்தி போல்
நீண்டு ஒன்று!
எத்தனை எழுதுகோல் ...
மனதுக்குள்
அத்தனையும் ஒருசேர
கும்மியடிக்க
குதித்து குதித்து
அந்த வீதியில் நடப்பதில்
அப்போது ஆனந்தம் போல!
எழுத்து மலர மலர
வாசம் வீசிய எழுதுகோல்!
திருகி கழற்றாமல்
இழுத்து கழற்றும் குப்பி!
திருகித் தேடாமல்
மையிருப்பை
கண்ணாடியாய்
கண்ணுக்குள் காட்டும்
எழுதுகோல்...
விளக்கு பூட்டி ஓன்று...
விலங்கு பூட்டி ஒன்று...
சாவிகூட மாட்டலாம்!
தலைகீழாய் இரண்டு...
அழகுப் பேழையோடு!
மெத்தப்படித்தவரின்
மேஜைக்கு போல அது...
கண்பார்த்த
எதுவும்
கவர்ந்த பாடில்லை...
ஆம்
அவன் கதை கதையாய்க்
கேட்டு வளருபவன்!
விந்தையாய் ஒரு
வினா வைத்தான்!
காட்சிக் கூடத்தில்
அடைபட்டுக் கிடந்த
சில பறவைகளைக் காட்டி...
அன்று
மைதொட்டு
எழுதிய எழுதுகோல்கள்
உதிர்ந்த சிறகா...
இல்லை
பறவைகள் வருந்தப்
பறித்த சிறகா....
விடைவரும் முன்னே...
காட்சிக்கு
காட்டு விலங்குகள் படம்!
காண்பதற்கு
சில கொம்புகள்
சில நரிப்பல்கள்
சில பஞ்சடைத்த புலிகள்...
விலங்குகள்!
இறுதியாய்
உறுதியாய்
ஒரு யானைத் தந்தம்!
யாரோ ஒடித்து
மைத்தொட்டு தொட்டு
எழுதிய ஒன்று...
பெருங்காவியமெனச் சொன்னது
நின்று நின்று
அவனிடம்
தந்தத்தைக் காட்டியது...
வாங்கித்தரச் சொல்லி...
கேட்டுப் பார்த்தான்...
கிடைக்கவில்லை...
வீடுவரை அழுதே வந்தான்!
ஆசைப்பட்ட
அந்த எழுதுகோலை...
அடைய முடிய வில்லையென!
அடம் பிடிப்பான் என
வாங்கி வைத்த
அத்தனை எழுதுகோலும்
விடிந்து எழும் அவனை...
மகிழ்ந்து எழச்செய்ய
காத்திருந்தது!
ஆசையைப் பார்த்தீர்களா!
கிடைத்தால்
கொண்டு வாருங்கள்...
அந்த எழுதுகோலை!
ஆனந்தம் தானே!
ஆசை அரங்கேரும் போது!
- க. மகேந்திரன், தூத்துக்குடி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.