எழுதுகோலின் தீர்க்கதரிசனம்

அந்தக் குப்பைத் தொட்டிக்குள்...
இரண்டு
சிறப்பு விருந்தாளிகள்!
எழுதும் முனை ஒடிந்து
தூக்கியெறியப்பட்ட
எழுதுகோல்கள் அவைகள்!
குருதியாய்
மை கொப்பளிக்க...
இறுதியாய்
இரண்டும் பேச ஆரம்பித்தன!
இரண்டையும்
வீசியது...
ஒற்றை நபரல்ல!
இரண்டுமே
முன் பின்
சந்திக்கவில்லை!
இப்போதுதான் சந்திக்கின்றன!
அமைதி
முறித்து
அவைகள் பேசின!
எத்தனை ஆசைகள்
அவனுக்கு அவள் மேல்...
எழுதி எழுதி
எத்தனை காகிதங்களைக்
கசக்கிப்போட்டான்...
அவனை
மயக்கிப் போட்ட விழிகள்...
இயக்கிக் கொண்டிருந்தது!
விழிப்போருக்கும் பின்
சமாதானத் தூது...
காதலோடு
ஒத்து ஒத்துப் பார்த்து
ஒத்துவராத வார்த்தைக் கோர்ப்பு!
முடியும் வேளையில்
விக்கிப் போய்
மையின்றி
எழுதாது போன என்னை!
முனை ஒடித்து ...
குப்பையில் போட்டுவிட்டான்...
முதல் காதலில்
ஆவணப்படுத்தப்பட
வேண்டிய நான் குப்பையில்!
காதல் தொடர்ச்சியில்
கால்தடுக்கி விழுந்த
காதல்...
பணம் சமமில்லை
சாதி சமமில்லை
மூலத்தில் காதல் இல்லை...
எத்தனை எத்தனையோ
பகை...
அப்படி ஒரு பகையில்
கொலை!
கோப்பு என்னவோ...
என்னால் ஆரம்பிக்கப்படவில்லை!
ஆப்பு என்னவோ...
எனக்குத்தான்!
அத்தனையும் கோர்த்து
மரணத்தை தீர்ப்பாய் சொன்னவன்!
சம்பிரதாயத்தில்...
சொல்லும் சமயமே
முனை ஒடித்து கொல்லும் நிலையெனக்கு...
பின் இப்படி குப்பைக்கு!
இரண்டுமே!...
ஆவணப்படுத்த
வேண்டிய ஞாபகச் சின்னம் தானே!
முதல் காதலின்
முதல் எழுத்து எழுதியதென!
வழுவாத நீதி
வழங்கியதென!
புலம்பிய அவைகள்...
புழுதியாய் கிளரி
வாழ்வின்
விடை தேடிய
ஒரு கையில் சிக்கின!
பள்ளிப் படியேறாத
அந்த மழலை
பசியிடம் மண்டியிட்டு
வீசியதில் காசு பார்த்து
காலத்தை ஓட்டிய...
அந்த மழலையின் கையில்!
அரங்கேறாத
அடிமென ஆசை
அரங்கேறியதாய்...
உணவு
வாங்க மறுத்து...
புதுமுனைகள்
அந்த எழுதுகோலுக்கு
பூட்டப்பட்டு...
புதிய காதலோடு
மழலையின் விரல்களில்...
கசங்கிய காகிதத்தை
விரித்து இழுத்து
புதிதாய்
எழுத்துக்கள் மலர்ந்தன!
எத்தனை
ஆசை தெரியுமா!
அவளுக்கு!
அந்த எழுதுகோலுக்கு...
அவைகள்
வாழ்த்தின...
அவள் காதலிக்கப்படுவாள்...
அவள் வறுமைக்கு
முடிவு கட்டி...
நல்ல தீர்ப்பு சொல்வாள்!
எழுதுகோலின்
வார்த்தைகள்...
தீர்க்க தரிசனமாக வேண்டி...
மலர்ந்த கவிதை இது!
- க. மகேந்திரன், தூத்துக்குடி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.