யாதுமாகி நின்றாள்...
யாதுமாகி நின்றாய்
தோழியே!
நீ யாதுமாகி நின்றாய்
ஈர்ஐந்து மாதம் கருவில் சுமந்து
பாலும் தேனும் ஊட்டி வளர்த்த
என் அன்னையின் அன்பை
உன் பேரன்பால் முறியடித்து யாதுமாகி நின்றாய்
பாசம் ஒரு புறம் இருக்கையிலும்
கண்டிப்புடன் வளர்க்கும் தந்தைக்கு ஈடாக
என்னை நன்னெறிப்படுத்தும் தோழியே
நீ யாதுமாகி நின்றாய்
புத்திமதி சொல்லும் போதிலே
சான்றோர்களுக்கும் ஒரு படி மேலாகச் சென்று
போதி மரமென்றே ஆகின்றாய்
வகுப்பறையிலோ
குறும்புத்தனம் மிகுந்த குழவி ஆகின்றாய்
என் மேனியில் நோய் ஏற்படும் போதிலே
உன் மேனி துடிதுடித்து மறுகணமே
பிணி தீர்க்கும் செவிலி ஆகின்றாய்
என் அன்னை தந்தையை
உன் அன்னை தந்தையாகப் பாவித்து
என் உடன்பிறவா சகோதரி ஆகின்றாய்
என்னுள் ஏற்படும் சிறுதவறை
மனம் நோகாத வண்ணம் சுட்டிக்காட்டும்
சிறந்த ஆசான் ஆகின்றாய்
துயர் வந்து சேரும் நேரமெல்லாம்
புன்னகையுடன் எதிர் வந்து
‘இதுவும் கடந்து போகும்’ என உரைக்கின்றாய்
வாழ்க்கை என்னும் கடலைக் கடந்து
கரை சேர்ந்திட
உற்ற நல்தோணி ஆகின்றாய்
யாதும் யாதுமாகி நின்றனள்
தோழியும் - தெய்வம்
என்றே தொழுவேன் அவளை நித்தமும்…!
- செ. பிரியதர்ஷினி, சிவகாசி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.