நான் அமர்ந்து செல்வதில்...
தூரத்தில்
பயணப்படும் இருவர்
எதிரில் தெரியும்
இருக்கையில்
சிறிது நேரம்
அமர்ந்து சென்றிருக்கலாம்.
இல்லை அமராமல் கூட
கடந்திருக்கலாம்.
அவ்விருக்கையும்
அப்போதைய
இயற்கைச் சூழலும்
இருக்கையில்
என்னை அமரச் சொல்லி
அழைக்கிறது.
அந்த இருக்கையை
கடந்த
இருவரின் மனநிலை
எப்படி இருந்ததென
எனக்குத் தெரியாது.
அவர்கள் இன்னமும்
என் பார்வையின்
எல்லைக்குள்தான் இருந்து
கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள்
வெறுமனே செல்வதாக
எனக்கு தெரியவில்லை.
ஏதோ சுவாரஸ்யம் மிகுதிபட
பதற்றமின்றி
அவர்கள் பேசிக் கொண்டு
செல்கிறார்கள்.
இது
பொதுவான சாலை
பொதுவான
சாலையோர மரங்கள்
பொதுவான நிழல்
பொதுவான
வண்ண விளக்குகள்
பொதுவான இருக்கைகள்
இப்படி எல்லாமும்
பொதுவாய் இருக்க
இருக்கையில் அவர்கள்
அமர்ந்திருந்தாலும்
அமராமல் இருந்தாலும்
அந்த இருக்கையில்
நான் அமர்ந்து செல்வதில்
அப்படியென்ன
பெரிதாய்ப் பிழை
நிகழ்ந்து விடப்போகிறது.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.