ஒரு மழைக் கவிதை

இரெண்டெழுத்தில்
ஈரமான கவிதை ஒன்று வேண்டுமெனில்
மழை என்று இதயப்பூர்வமாய் எழுதிக்கொள்...
அகநானூறும் - புறநானூறும்
தெரிந்துகொள்ள வேண்டுமெனில்
அவளை ஒரு முறை மழையில் நனைந்து வரச்சொல்
காதலும் - காமமும் சங்கமிக்கும்
ஒரு கோடி கடல் உருவாக்கும் ஒரு துளிகளால் உருவானது
அந்த ஆதி மழை
ஒரு துளி என்றவுடன்தான் ஞாபகம் வருகிறது
இந்த உலகமும் நாமும் ஒரு துளிகளால் உருவானவர்கள்தானே ...
நான் சொல்லும் கவிதைக்கு
அர்த்தம் தேட அகராதி எதற்கு?
இலக்கு இல்லாதவன் கவிதைக்கு
இலக்கணம் எதற்கு?
இந்த உலகத்தில் உற்று நோக்கினால்
எல்லாமும் விளங்கும்
ஆழ்ந்து படி
நனைதலின் அர்த்தம் விளங்கும்
மழையின் அர்த்தம் தேட வேண்டுமா?
நனைந்து பார்...
வாழ்க்கையை ரசித்து ருசிக்க வேண்டுமா?
நனைந்து பார்...
நனைதல் சுகத்தை முதலில் தந்த பிரம்மன்
அந்த மழைதான் !!
காயம், காதல், சோகமென்று எல்லா ரணத்திற்கும்
நிவாரணம் தரும் நிவாரணி அந்த மழை
மயில் தோகை விரித்தால்தான் அழகு
மழை எப்போதும்
நீ நனைந்து கொண்டிருக்கும் வரை அழகு !!
தென்றல் சில்லென்று அவளோடு காதல் கொள்வது போல
அந்த மழை தேவதையோடு நானும் காதல் கொள்ளப் போகிறேன்...
தயவு செய்து
என்னை நனைய விடுங்கள்
அந்தக் காதல் மழையோடு!
- நௌஷாத் கான். லி, சோழபுரம், கும்பகோணம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.