இரு வேறு வாழ்க்கை
உணர்கிற வாழ்க்கை ஒருவித மாகும்
உண்மையில் முழுவதும் நடக்காது
உள்ளம் காணும் கனவுகள் எல்லாம்
உருப்படியாகி நிலைக்காது
வனம்நிறை மலர்கள் எல்லாம் வந்து
வண்ண மாலை ஆகாது
வருவன சிலவாய் இருக்கும் எனவே
வலிவாய்ப் பற்றில் விளைக்காது
உண்மை வாழ்க்கை உணரும் வாழ்க்கை
ஒருவகை சமரசம் உணர்ந்திடுவோம்
நன்மை தீமை அளவில் பார்த்து
நமக்கு ஏற்றதைப் பிடித்திடுவோம்
பன்மை உணர்வுகள் பல்லைக் காட்டும்
பார்த்தால் சிலவே பெயர்நாட்டும்
படித்து அறிந்து கொள்வது கடினம்
பயன்படும் அனுபவம் வழிகாட்டும்!
சிலசமயத்தில் உணர்வு வாழ்க்கையும்
சிறந்து வந்து நிலைநாட்டும்
சீரிய சிந்தனை சான்றோர் வழிமுறை
சிக்கலைத் தீர்க்க வழிகாட்டும்
வலம்வரும் வாழ்க்கையில் வருவது எதையும்
வகைப்படுத்தியே தரம் காண்போம்
நலம்பல கூடும் வளம்பல சேரும்
நாயகன் அருளும் உடன் ஏற்போம்!
- கவிப்பேரொளி நீரை. அத்திப்பூ
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.