விடியும் வேளையே...!
இத்துணை நேரம் கடந்தும்
விழிகள் உறங்க மறுக்கிறதே!
இரவின் தன்மை
கொஞ்சம் கொஞ்சமாய்
நீர்த்துப்போனதோ!
பகல் தேசங்களுக்காக
பூமிப்பந்தின் மறுபக்கத்தில்
விஞ்ஞானம் வைத்த
மின் விளக்குகள்
இரவில் விழித்து
கணிணியில் பணிசெய்யும்
ஓர் கூட்டம்!
மெத்தை விரிப்பும்
மெல்லிய தலையணையும்
மின்விசிறியோ குளிரூட்டியோ...
உறங்க உற்சாகப்படுத்தும்
நிலைமாறி கைபேசிக்குள்
தலை அடகு வைக்கப்பட்ட நிலை!
ஆசைகளை அள்ளி முடிந்து
மெல்லப் புரட்டும் நினைவுக்குதிரைகள்
கனவுக்குதிரைகள் தொலைக்கப்பட்டன!
ஓசையில்லா அறையில் கூட
இரவுக் கூர்காவின் விசில் தட்டியேச் செல்கிறது!
இரவா பகலா தடுமாறி
சலசலக்கும் பறவைகளும் கவனம் ஈர்க்கிறது!
வீழ்ந்துபோன இரவுக்கு
தெருநாயின் குரைப்பும் ஊளையும் பின்னனி
அவ்வப்போது பாடுகிறது!
பொதியாய்க் கனக்கும்
வரும் நாட்களின் பணிச்சுமை!
காலம் கடந்து கைக்கூடும்
இரவின் இரகசியங்கள்...
விடியும் வேளையே
முடிகிறது... உறங்க...!
- க. மகேந்திரன், தூத்துக்குடி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.