அச்சம் தவிர்...
அச்சந் தவிர்த்தல் ஆண்மைக் கழகு
மெச்சத் தகுந்த பெண்ணின் திறனே
இச்சகத் திலுள்ளோர் எங்கும் நிமிர்ந்திடும்
பச்சைக் குணமாம் பயமின் றிருத்தல்
நல்வினை யாற்றும் நல்லோர் எதிர்கொளும்
பல்வினை யாவும் பரிதிமுன் பனியென
வெல்வதற் கென்றே வேண்டுமிக் குணந்தான்
கல்லார்,கற்றோர் கனிந்தோர் யாவரும்
சொல்லார் செய்வார் துணிவுடன்,நிற்பார்
வில்லாய் வளைவார் விரையும் அம்பு
மெல்லப் பழங்கதை வீணாய்ப் பேசிக்
கொல்லும் குணத்தைக் கூறாய்ப் போட்டு
செல்லும் சினத்தைச் செலவிடல் தீதெனச்
சொல்லும் வகையாய்த் துணிந்திடல் நன்று
எதுவரின் என்னென இயங்கி இலக்கைப்
பொதுவினில் அடைய வேண்டும் எனலால்
அச்சந் தவிர்த்தல் ஆண்மைக் கழகு
மெச்சத் தகுந்த பெண்ணின் திறனே.
- இளவல் ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.