பாரதியும் தேசமும் ஒன்றே!

திசையதிரும் சொற்களினால் கவிதை செய்தோன்
தேசத்தின் விடுதலைக்காய் வெடிம ருந்துப்
பசைதடவிச் சொற்களினைப் பார்த்துப் பெய்தான்
பார்க்கெல்லாம் திலகமென நிமிர்ந்து நின்றான்
கசையடியாய் வெள்ளையர்தம் முதுகில் சாட்டைக்
கவிதைகளால் சுழற்றியடித் தோட விட்டான்
விசையுறுமே வார்த்தைகளின் வீரி யத்தால்
வெடிகுண்டாய் நாற்புறமும் வீசி நினறான்.
இசையுடனே தாளந்தான் சேர்ந்தாற் போல
இன்னமுதும் கற்கண்டும் இணைந்தாற் போல
பிசைந்துண்ணும் பழஞ்சாதம் தயிரும் போல
பேய்மிரட்டும் இடிமின்னல் மழையும் போல
அசைநதாடும் மயில்காட்டும் அழகும் போல
அற்புதங்கள் செய்விக்கும் படைபபைத் தந்தான்
நிசமாக யாரவனோ என்றா கேட்டீர்
நேராக பாரதியார் என்றே சொல்வேன்.
நாமிருக்கும் நாடுநம தென்று ணர்த்தி
நம்பிக்கை வாசகத்தைச் செவியில் ஏற்றி
தாமிருக்கும் அடிமைநிலை மக்க ளுக்குத்
தகர்த்திடவே வழியதனைக் காட்டி நின்றான
பூமியிலே பாரதமும் சென்னி யோங்கப்
புரிந்திட்டான் தேசபக்திப் பாட லெங்கும்
சாமியெனக் கவியுலகில் நிமிர்ந்து நின்றான்
சாற்றுகின்ற தமிழ்மொழியைத் தெய்வ மென்றான்
வெண்பாவில் அதிசின்னப் பயலைக் காட்டி
வீரமிகு ஆனந்தக் கும்மி பாடி
பெண்பாவை ஆணுக்கு இளைத்தல் இல்லை
பெரிதாகும் கற்பதனைப் பொதுவில் வைத்து
மண்பயனாய் மாதரினை இழிவு செய்யா
மகத்துவத்தை மாநிலத்தில் பேணச் செய்தான்
கண்பயனாய்ப் பாரதத்தின் விடுத லையைக்
காண்பதுவே பாரதியார் வேட்கை யன்றோ!
பாரதியார் பாரதி யார் என்றே கேட்கும்
பாமரரே பாமரரே படித்து ணர்வீர்
நேரடியாய் நீருணர வில்லை உங்கள்
நேர்முன்னே நேர்மறையாய் விளங்கும் பாக்கள்
ஓரடியாய் ஓரடியாய் உள்ளே வாங்கி
உணர்ந்தாலே பாரதியார் பெருமை காண்பீர்
தேரடியில் நிலைகொள்ளும் தெய்வம் போலத்
தேசமதும் பாரதியும் ஒன்றே யன்றோ!
- இளவல் ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.