ஆசிரியர் நீடு வாழி!
அகரம்தான் கைப்பிடித்துக் கற்றுத் தந்தீர்
அகத்தினிலே இருளகற்றி ஒளியை ஏற்றிச்
சிகரந்தான் ஏற்றிவைத்தீர் வகுப்பில் செய்யும்
சேட்டைகளைப் பொறுத்தபடி செதுக்கி நல்ல
முகவரிதான் முழுதாகத் தந்தீர் வாழ்க்கை
முழுவதுமாய் நினைந்துமகிழ் நெகிழ்வைத் தந்தீர்
தகரந்தான் என்றாலும் தங்க மாக்கித்
தந்தவரே ஆசிரியர் நலமாய் வாழி!
ஐயங்கள் தீர்த்திடுவார் அறிவைச் சேர்ப்பார்
அன்பென்னும் இழையாலே கட்டி வைப்பார்
வையகத்தில் நலம்வாழ அடிக்கல் நாட்டும்
வார்த்தைகளை அறிவுரையாய்ச் செவியில் சேர்ப்பார்
கையளவுக் கல்வியினை ஊட்டி நிற்பார்
கடலளவாய் நம்மனதில் ஊறச் செய்வார்
பையளவும் பயனின்றி மாண வர்க்காய்ப்
பாடுபடும் ஆசிரியர் நீடு வாழி!
ஆசிரியர் தியாகந்தான் நாட்டைக் காக்கும்
அழகாக்கும் கல்வியினால் அரணாய்ச் சேர்க்கும்
ஆசிரியர் ஏற்றுகின்ற அறிவுத் தீபம்
அற்புதங்கள் செய்யவைக்கும் வழிந டத்தும்
ஆசிரியர் ஒவ்வொருமா ணாக்கர் வாழ்வில்
அடியெடுத்து நடக்கவைத்து வெற்றி காட்டும்
ஆசிரியர் அகரமுதல் னகர மட்டும்
ஆனந்தம் காட்டிடுவார் என்றும் வாழி!
- இளவல் ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.