வாழ்ந்து காட்டுவோம் வா!
கையிழந்தோன் கைரேகை சோதி டத்தைக்
கணப்போதும் நம்புவதே இல்லை நம்பிக்
கையினையே கரமெனவே எண்ணி வாழ்வில்
கால்நடந்து முன்னேறிச் செல்வான் என்றும்
மெய்யினையே கொள்கையெனக் கொண்டால் வெற்றி
மேன்மைகளே வந்துசேரும் நாம்தன் னம்பிக்
கையினையே கைவிடாது தொடர்ந்தால் நம்வாழ்க்
கையினையே வாழ்ந்துகாட்ட முடியும் தோழா.
வலையறுநதும் வீழ்ந்திடாது மீண்டும் மீண்டும்
வலைபின்னும் சிலந்தியிங்கு முயற்சி காட்டும்
நிலைகுலைந்தும் தாழ்ந்திடாத நெஞ்சம் வேண்டும்
நேர்மையினைப் புராணங்கள் எடுததுக் காட்டும்
மலையளவுத் துயர்வரினும் மயங்கி டாது
மனிதமனம் செயல்படுதல் நன்றாம் யாண்டும்
அலையடிக்கும் துன்பங்கள் புறத்தே தள்ளி
அகமகிழ வாழ்ந்துகாட்ட வாராய் தோழா.
ஊழ்வினையை ஒருபோதும் நம்பி டாதே
உறுத்துவருந் தீவினையால் வெம்பி டாதே
பாழ்படுத்தும் புகழுக்காய்க் கும்பி டாதே
பகற்கனவில் ஒருபோதும் துஞ்சி டாதே
வீழ்த்தவரும் சூழ்ச்சியினால் அஞ்சி டாதே
வெற்றிகளுக் கெந்நாளும் கெஞ்சி டாதே
வாழ்த்துவதால் வாழ்ந்திடலாம் வாழ்ந்து காட்டு
வாழ்க்கையிங்கு வொருமுறைதான் வாழ்வோம் வாவா.
- இளவல் ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.