மீண்டும் வள்ளல்...?
கடையேழு வள்ளல்கள்... கதைகள்
படித்துப் பிடித்துப்போனதில்...
கடைவீதி நடைமேடையில்...
கண்கள் கசக்கி கைப்பணம் தொலைந்ததில்
பேருந்து தவறவிட்டு... ஊர்போக வழியில்லையென...
கைநீட்டியவளிடம்...
அள்ளிக்கொடுத்து...
நானும் வள்ளல் ஆனேன்...!
பெருங்கடை வாசலில்...
இன்னொருத்தி!
பெருங்கொடை கேட்கவில்லை...
கைப்பிள்ளையைக் காட்டிப்
பசியாற்ற
கையேந்தியபடியே நின்றாள்...
நானும் கொடுத்து...
வள்ளலாய் மனம் குளிர்ந்தேன்...
காலத்தின் ஓட்டத்தில்...
ஆண்டுகள் கடந்தன
அதே இடத்தில்... அதே பெண்...
இன்றும் வரை
அவள் ஊர்சேர...
பேருந்து வரவேயில்லையாம்!
இன்றுவரை...
அந்தப் பெருங்கடை வாசல்...!
இன்னொருத்தியின்
குழந்தை வளரவேயில்லை...
பசியும் குறையவேயில்லை...
மீண்டும் வள்ளல் ஆகவா... நான்...
மீண்டே நகர்ந்தேன் அந்த இடங்களை விட்டு...!
- க. மகேந்திரன், தூத்துக்குடி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.