குனிந்தபடி இருப்பதற்கா தலைகள்
நாட்டினிலே நடக்கின்ற அநியாயத்தை
நான்கேட்கத் தெருவிற்கு வந்து நின்றால்
வீட்டினிலே இருப்பவர்கள் ஏசுகின்றார்
வீண்வேலை எதற்கென்றே பேசுகின்றார் !
கூட்டிற்குள் அடைப்பட்டு இருத்தல்விட்டு
குறைகேட்கச் சிறகுகளை விரியச் செய்தால்
மாட்டிற்குக் கிடைக்கின்ற சாட்டைபோல
மரியாதை தானுனக்கும் கிடைக்குமென்றார் !
உண்மைகளைப் பேசுதற்கு வாய்திறந்தால்
ஊர்கெட்டுக் கிடக்கிறது வாய்மூடென்றார்
கண்ணிரண்டில் பார்த்ததினைச் சொல்ல வந்தால்
கழறுதற்கு நாக்குனக்கு இருக்காதென்றார் !
எண்ணத்தில் கபடின்றி நேர்மையோடு
என்பணியைச் செய்வதனால் தலைநிமிர்ந்து
மண்மீது நடந்தாலோ காண்போரெல்லாம்
மமதையோடு செல்வதினைப் பாரென்கின்றார் !
உழைக்காமல் உழைப்பவரின் உழைப்பைத் தின்னும்
உன்மத்தர் செயல்களினைக் கேட்க வந்தால்
பிழைப்பதற்குத் தெரியாத முடடாள் என்றே
பின்கழுத்தைப் பிடித்தென்னைத் தள்ளுகின்றார் !
குழைந்திரந்து வாழ்வதுவும் வாழ்வா சொல்வீர்
குனிந்தபடி இருப்பதற்குத் தலையெதற்கு
பிழைகளினைச் சுட்டுதற்கே நிமிர்ந்து நிற்பேன்
பின்விளைவு எதற்கும் நான் அஞ்சமாட்டேன் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.