தலைமுறை இடைவெளி
அறிவியலின் அதிவேக வளர்ச்சி யாலே
ஆராயும் மனப்பான்மை வளர்ந்த தாலே
அறிவினிலே பகுத்தறிவு சேர்ந்த தாலே
அனைத்திலுமே புதுப்பார்வை பதிந்த தாலே
குறிப்பிட்ட கூட்டுக்குள் வாழு கின்ற
குறுமனத்து முதியோரின் எண்ணத் திற்குத்
தெறிக்கின்ற இளைஞர்தம் புத்தெ ழுச்சி
தெளிவாகப் பொருந்தாமல் முரணா யிற்று !
பண்பாடு ஒழுக்கமென முதியோர் பேசப்
பாமரத்துத் தன்மையென இளைஞர் கூறிக்
கண்முன்னே மேல்நாட்டு நாக ரீகக்
கண்காட்சி நடத்துவதைப் பொறுத்தி டாமல்
மண்மீது போயிற்றே எல்லாம் என்று
மனம்குமுறி இளையோரை ஏசி நிற்க
விண்மீது பறக்கின்ற இளைஞர் கூட்டம்
விரைந்ததுவே முதியோரை விட்டு விட்டே !
புதிதான மாற்றத்தை நெஞ்சில் ஏற்று
புரியுமாறு பழம்பண்பின் சிறப்பைக் கூறிக்
குதித்தோடும் இளைஞர்க்கு வழியைக் காட்டி
கூட்டாக முதியோரும் இணைந்து வந்தால்
மதியாத இளைஞருமே மதிப்பைத் தந்து
மண்வாசம் மாறாமல் புதுமை சேர்க்க
உதித்துவிடும் பண்பட்ட சமுதா யந்தான்
உடைந்தஇடை வெளியிணைந்தே வாழ்வும் ஓங்கும் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.