கனவுப் புள்ளி
இரவு பத்து மணிக்கு
படுக்கைக்குச் செல்கிறேன்
சிறிது நேரம் கைபேசி சகிதமாய்
இருந்த பின்னர் உறங்குகிறேன்.
கனவில்
சுவர்க்கோழி காட்டுகிறது
சரியாக நள்ளிரவு பன்னிரண்டு மணி.
நானும் அவளும்
மாலை ஐந்து மணி வாக்கில்
பூங்கா இருக்கையில் அமர்ந்தபடி
எங்கள் காதல் திருமணம்
குறித்தும்
எதிர்க்காலத் திட்டங்கள்
குறித்தும்
விவாதித்துக் கொண்டிருந்தோம்.
எங்களது உரையாடல்
கருத்த இரவை போலவே
நீண்ட வண்ணமிருக்கிறது.
மறுநாள் இரவிலும் அதே
பூங்கா இருக்கையில் தொடர்கிறது
எங்களின் உரையாடல்.
இன்னும் விடியலைக் கூவி
அறிவிக்கவில்லை சேவல்கள்.
நாட்கள் பல கடந்தும்
மாலை ஐந்து மணியை கடக்கவில்லை.
பல யுகங்களாகியும் நமது உரையாடலும்
பூங்கா இருக்கையும் ஆதி இருளும்
அந்தக் கனவுப் புள்ளியை விட்டு
இதுநாள் வரை நகரவேயில்லை.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.