மறுப்பேதுமில்லை
நேர்கோட்டின்
உயரத்தை அழிக்காமல்
பக்கத்தில் பெரிய கோடிழுத்து
ஒரு கோட்டினை அழிக்காமல்
பெரிதாக்கும் கலையை
கற்றுக் கொண்டது
என் குழந்தையிடம்தான்.
ஐ பார்க்க வேண்டுமா?
என ஆவலுடன்
கேட்ட குழந்தைதான்
தன் கண்ணை ஐ எனக்காட்டி
பரிகசித்தது.
வந்த விருந்தினரை
சாப்பிட இலையில் உட்காரச்
சொன்னதற்கு
என்னைக் கேலிப் பேசி
அவரைக் கோரைப்பாயில்
அமர வைத்ததும் குழந்தைதான்.
எனக்குப் பலூன்
பயத்தைப் போக்கி
அதைப் பெரிதாய் ஊத
கற்றுக் கொடுத்ததும்
அதே குழந்தைதான்.
நம் தவறுகளையும்
அறியாமைகளையும்
கண்டு களைவது
குழந்தைகளெனும் போது
குழந்தைகளை
"கடவுள்" எனச் சொல்வதில்
மறுப்பேதுமில்லை எனக்கும்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.