அறிவொன்றே தெய்வம்
முட்டாள்கள் அதிகமாக உள்ளதாலே
மூடங்கள் அதிகமாக நிலவுதிங்கே
கட்டிவைத்த வீட்டிற்குள் ஊரும்பல்லி
கத்தினாலும் சகுனமென்றே பதறுகின்றார் !
குட்டிபோட்ட பூனையிடை ஓடினாலும்
கூடிவரா செலும் பணியென்றஞ்சுகின்றார்
பொட்டின்றி விதவைப்பெண் எதிர்வந்தாலோ
போச்செல்லாம் எனயேசிப் புலம்புகின்றார் !
சாப்பாடே இல்லாமல் ஏழையர்கள்
சாகின்ற காட்சிகளைக் கண்டபின்பும்
காப்பதற்கே தெய்வமென்று சொல்லிக்கொண்டு
காத்திடுவாய் எனயெதற்குக் கெஞ்சவேண்டும் !
பூப்பழங்கள் தேங்காய்கள் எனக்கொடுத்தே
பூசைகளை ஏன்சிலைக்குச் செய்யவேண்டும்
கூப்பாடு போடுவோரே அறிவை நன்றாய்க்
கூர்தீட்டிப் பாருங்கள் தெரியும் உண்மை !
உழைக்காமல் இருப்போர்க்குத் தெய்வம்கூட
உதவிகளைச் செய்யாமல் காறித்துப்பும்
பிழைப்பதற்கு வழிகள்தாம் இருக்கும்போது
பிறகெதற்குக் கைகட்டி வணங்க வேண்டும் !
தழைப்பதற்கே அறிவியல்தாம் வழியைக் காட்டத்
தவறவிடும் மூடர்க்கோ வாழ்வே இல்லை
அழைப்புனக்கு யார்தருவார் அறிவினாலே
ஆய்ந்துசெயல் செய்பவர்க்கே கிடைக்கும் எல்லாம் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.