முள்ளின் முடிவு
காலில் முள் தைத்த
ஒருவன் வலி தாளாமல்
அந்த முள்ளெடுத்து எதிர்படும்
வரவேற்பு வளைவில்
அலங்கரித்துக் கொண்டிருக்கும்
ஊதிப் பெருத்த பலூன்களில்
சிலவற்றை
உடைக்கச் செய்கிறான்.
ஒரு பெண்ணின்
வியாபாரக் கூடையில்
நிரம்பி வழியும்
பழங்களை ஆங்காங்கே குத்தி
சிதிலமாக்குகிறான்.
நித்திரையின் கனவில்
உழலும் ஒரு கைக்குழந்தையை
அந்த முள் கொண்டு குத்தி
அழச் செய்கிறான்.
தான் பெற்ற வலியின்
உச்சமும் துயரமும்
பிரிதொருவர்க்கு நிகழ
அவன் அளவில்லா
ஆனந்தம் கொள்கிறான்.
இறுதியாய்
அம்முள்ளினை
ஒரு பரபரப்பான சாலையில்
அவன் வீசிப் போகிறான்.
தம்மால் பிறர்க்கு நேர்ந்த
வலியும் வேதனையும்
இனி ஒருவர்க்கும்
நிகழக்கூடாதென்று
மித வேகப் பேருந்தின்
சக்கரத்தில் விபத்துக்குள்ளாக
தன்னை
மாய்த்துக் கொள்ளுகிறது
அந்த முள்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.