காற்று
இதயம் வரை வந்து
உறவாடிப் போன காற்றின்...
உதயம் எப்படியென !
யோசித்திருப்போமா!
உயிர் உள்ளவரை
உறவாடிப் போகும் காற்றின்
உயர்வான உபயோகத்திற்கு...
உபயம் ஏதேனும் செய்தோமா!
ஒரு வேளை...
இப்படியெல்லாம்
காற்று நினைத்திருக்குமோ...
நம்மை
நன்றியற்ற நாதியன்றே...
சில நாட்கள் மண்ணையள்ளித்
தூவியதோ காற்று!
சூறாவளியாய்ச்
சுருட்டியடித்து வாட்டியதோ!
புயலாய்...
புண்ணாக்கியதோ!
அத்தனையும் பொய்யென
அங்கமெல்லாம் மகிழ
மெல்ல வருடிச் சொன்னது காற்று!
காற்றுக்கடன் தீர்க்க...
செடி கொடி மரமென நட்டு,
தீர்க்க நான் முயன்ற போது...
மலரின் நறுமணத்தை...
சுவாசித்தில் கொண்டு சேர்த்த காற்று...
கணக்குப் பார்த்து
கழித்துப்போக முடியாத தாய்ப்பாலாய்...
என்னை அதன் சேயாக்கிப் போனது...
- க. மகேந்திரன், தூத்துக்குடி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.