நேர்த்திக்கடன்
குளத்தில் இறங்கும் போது
குளித்துக் கொண்டிருப்பவர்
சொல்கிறார்.
குளத்தில் பாசிகள் நிறைய
இருப்பதாய்.
பார்த்துப் பக்குவமாய்
இறங்கிக் குளத்தில் குளித்து
முடிக்கிறேன்.
நெடுநாளைய நேர்த்திக்கடன்
நிறைவேறுவதை நினைத்து
அம்மாவின் முகத்தில்
மகிழ்ச்சி.
குளத்தில் வெள்ளிச் செதில்கள்
மின்னும் மீன்களும்
துள்ளிக் குதிக்கும் தவளைகளும்
குளித்து முடித்து
இன்னும் கரையேறவில்லை.
அவைகளின் நேர்த்திக்கடன்
எப்போது முடியுமென்பது
அந்த ஆண்டவனுக்கே
வெட்ட வெளிச்சம்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.