மனசு முழுக்க மகிழ்ச்சி
வண்ணங்கள் குழைத்தபடி
வலம் வரும் பட்டாம்பூச்சியை
பிடிக்க விழைகிறாளவள்.
விரல்களில் அகப்படாது
தப்பிக்கும் வித்தையை
நேர்த்தியுடன்
கற்று வைத்திருக்கிறது
பட்டாம்பூச்சிகள்.
பட்டாம்பூச்சியின்
படபடக்கும் சிறகுகளின் அழகும்
என்னவளின் இமையசைவும்
ஒருங்கே இருப்பினும்
என்னவளின் விழிகளுக்கே
முதற்பரிசு அறிவிக்கிறது
பூவனம்.
ஒவ்வொரு வண்ணமாய்
அவளள்ளிப் பூசிக் கொண்டதில்
நிறங்களற்று கிடக்கிறது
மழைக்கால வானவில்.
அவள் பட்டாம்பூச்சி பிடிப்பதில்
மொத்தமாய்
தோற்றுப் போனாலும்
மனசு முழுக்க
மகிழ்ச்சி நிலைத்திருக்கும்படி
அவளுக்குத் தன்னையேத்
தந்தனுப்புகிறது
அந்தப் பூவனம்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.