தமிழ் ஆணினம்
முழங்கிய தமிழ் வார்த்தை,
மூலகம் எனவோதி;
திமிறிய எருதுகளின்,
திமில்களை அடக்கித் திரிந்தவன்;
திரவியந் தேடி அலையைக் கடந்தவன்,
தொன் தமிழ்க் குடியன்;
தொகை சால்பு பழையன்,
ஆசாரக் கோவை அணிந்து;
நாலடி, ஈரடி பேசி,
நீதி வழுவாக் குடும்பியாய்;
நீண்ட வரலாறு படைத்து,
பாசத்துள் பனைவெல்லம் மறைத்து;
பாசாங்கு தன்னினமில்லை என்று,
பார் போற்ற வாழ்ந்தவன்; இன்று
மழுங்கிய தமிழும்,
விழுங்கிய விட ஆங்கிலமும்;
அறிவிலா முண்டமாய்,
ஆனந்தத் தண்டமாய்;
போதை, பேதை எனவலைந்து,
அந்நியக் கலை மோகத்தால்;
தன்னிலை மறந்து, வெற்றுப் பிண்டமாய்,
பாசத்தைக் கெடுத்து;
பணத்தைப் பச்சைப் போர்வையாக்கி,
பதுங்கி பதுங்கி அலைவதை விட்டு;
தமிழ் தந்த வாழ்வு,
அமிழ்த அறங்கொண்ட வாழ்வு;
அணைத்து வாழ் வாழ்வு,
அனைத்தும் விரும்பி வாழ்;
ஆணினம் பெண் காப்பினம் என்று,
அர்த்தநாரியே உலக ஆதார மென்று;
அதை அறிந்து வாழ்வோம் நாமின்று...
- ப. வீரக்குமார், திருச்சுழி.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.