எழில் வணிகம்
ஊர் நடுவே பெரிய மரம்
உட்கார இடம் கொடுக்கும்
சீர்போல வந்த புது
சிற்றுந்து நிற்குமிடம் !
சிற்றூரின் மக்களெல்லாம்
சிற்றுந்தில் ஏறுதற்கும்
சுற்றுபுறம் செல்வதற்கும்
சுறுசுறுப்பாய் ஆனதிடம் !
மக்கள்தம் நடமாட்டம்
மாலைவரை இருந்ததனால்
பக்கத்தில் சிறுகடைகள்
பாதையோரம் தோன்றியது !
தின்பண்டம் இளநீரும்
தித்திக்கும் தேநீரும்
நன்மணத்துப் பூக்கடையும்
நன்றாக விரிந்ததங்கே !
மாலை வரை விற்காத
மலர்களினை மரத்தடியின்
மூலையிலே குப்பையென
முனியம்மாள் கொட்டிவிட்டாள் !
சிற்றுந்தில் ஏறவந்த
சின்னசாமி அதைப்பார்த்தே
வெற்றிலையும் பாக்குபழம்
வைத்து மஞ்சள் பூசிவிட்டான் !
காலையிலே வந்தவர்கள்
கண்களுக்கு மரத்தடியோ
பூசைசெய்த சாமியாகப்
புலப்படவே வணங்கி நின்றார் !
வருவோரும் போவோரும்
வணங்கி நின்ற காட்சிகண்டே
அருகினிலே உண்டியலை
அதிலொருவன் நட்டு வைத்தான் !
உண்டியலும் நிரம்பியது
ஊர் எல்லைசாமியாகிக்
கண்கண்ட சக்தியாகிக்
காண கூட்டம் பெருகியது !
இங்கிருக்கும் எல்லைசாமி
இப்படித்தான் தோன்றியதோ
எப்படியோ மடமையிலே
எழில்வணிகம் நடக்கிறது !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.