காணிக்கை கேட்டாரா கடவுள்?
கடவுளர்க்குச் செலுத்துகின்ற காணிக் கையைக்
கடவுளர்கள் ஏறெடுத்தும் பார்த்த துண்டா
அடஇவர்கள் பொன்பொருள்கள் கொடுத்தா ரென்றே
அருகழைத்து நலம்கேட்ட காட்சி யுண்டா !
முடமாகச் செல்வந்தான் கோயி லுக்குள்
முடங்கிருந்தால் நாடுவளம் பெறுத லுண்டா
விடநெஞ்சர் வெளிநாட்டில் பதுக்கல் போன்றாம்
வினையின்றி கருவூல அறைக்குள் தூங்கல் !
கோயிலுக்குள் செல்வத்தைக் கொட்டு வோரே
கொஞ்சமேனும் ஏழையரை எண்ணிப் பார்ப்பீர்
வாயிலுக்கு வெளியினிலே கையை ஏந்தி
வாட்டமுடன் அமர்ந்திருக்கும் முகத்தைப் பார்ப்பீர் !
சேயிக்குப் பாலூட்டப் பாலே யின்றிச்
செத்தவள்போல் விழுந்திருக்கும் தாயைப் பார்ப்பீர்
நாயிக்குக் கிடைத்திட்ட தெங்கங் காயாய்
நாம்செலுத்தும் காணிக்கை ஆக லாமா !
உண்டியலில் செலுத்தாமல் கல்வி கற்க
ஊருக்குள் பள்ளிகளைக் கட்ட ஈவீர்
உண்டியலில் கொட்டாமல் நோய்கள் தீர்க்க
உரியமருத் துவமனைகள்கட்ட ஈவீர் !
கண்குருடு செவிகேளா குழந்தை கட்குக்
காப்பகங்கள் விடுதிகளைக் கட்ட ஈவீர்
எண்ணற்ற நலதிட்டம் செய்தி டாமல்
எற்றுக்குண் டியலில்நீ போட வேண்டும் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.