பறிபோன உரிமைகள்
நான்கு வழிச்சாலை
ஆறுவழிச்சாலை
எட்டுவழிச்சாலையென...
யோசனையின் தூரத்தைக் கடந்து...
சாதனையின் பாதையில்...
பயணித்துக் கொண்டேயிருக்கிறது
பயணத்தின் பாதை!
இருந்தும் பாதுகாப்பில்லா
பாதயாத்திரைவாசிகளை...
கடந்து போகும் போதெல்லாம்
நடந்து போன கால்களின் தடங்கள்
தொடர்ந்து போனதில்
பிறந்த ஒற்றையடிப்பாதை...
எட்டுவழிச்சாலையாய்
பரிணமித்த போதும்...
பரிதாபத்துக்குரிய பங்கு மட்டுமே...
பாதங்களுக்கும் பாதசாரிகளுக்கும்!
பாதையைவிட்டு
இறங்கிப்போகச் சொல்வதும்...
தனிப்பாதை போடச் சொல்வதுமென...
பாதை போட்ட பாதங்களுக்கு
பறி போனதோ உரிமைகள்!
- க. மகேந்திரன், தூத்துக்குடி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.