தீர்ப்பு
கூடமைக்க மரம்
தேடியலைந்த பறவைகள்
நீண்ட பயணத்திற்குப் பின்
ஒரு பெருமரத்தைக் கண்டு
மகிழ்ந்தன.
மரத்தையொட்டி
மண்ணின் தாகம் தீர்க்க
சலசலத்து
ஓடிக் கொண்டிருக்கிறது ஓடை.
பெருமரத்தின்
மேற்கில் பசுமை வயல்வெளிகள்
பறவைகளின்
தீனிக்குப் பஞ்சமில்லை.
கிழக்கில் நிறைவாய் அழகிய
கிராமம்.
இப்பெருமரத்தின் கீழ்
பிரிவுபட்ட இரு குடும்பத்தின்
இருபதாண்டு பிரச்சனை
செவிச் சவ்வு கிழிய பஞ்சாயத்து.
மரம் இரு குடும்பத்திற்கும்
சரிபாதியென தீர்ப்பாகிறது.
பறவைகள் கூடமைத்து
இல்வாழ்வை
இனிதே தொடங்கும் கனவில்
இடி விழுந்தது போல்
வெட்டரிவாளும் கோடாரியும்
கனகச்சிதமாய் மரத்தின் மீது
விழத் தொடங்கின....!
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.