அணையட்டும் சாதித்தீ
எற்றுக்கு வளர்க்கின்றாய் சாதித் தீயை
எரித்தெல்லாம் சாம்பலாக்கி அழிப்ப தற்கா
வெற்றியென்று கூச்சலிட்டே ஆண வத்தால்
வேரோடு மனிதத்தைத் தீய்ப்ப தற்கா
பொற்கால சங்கமென்று போற்றும் நூலில்
பொலிகின்ற யாதும்ஊர் கேளி ரென்னும்
நற்பண்பை அரவணைக்கும் அன்பு தன்னை
நடுவீதி தனில்எரித்தே கருக்கு தற்கா !
இடையினிலே வந்தயிந்தச் சாதித் தீயோ
இருந்திட்ட பொதுமையினை எரித்த தின்று
நடைமுறையில் இல்லாத ஏற்றத் தாழ்வை
நன்கமர்த்திக் கீழ்மேலாய் மாற்றிற் றின்று
படையெடுத்துப் பகைவரினைக் கொல்லல் போன்று
பழகிட்ட நட்பினையே சாய்க்கு தின்று
விடைகொடுத்துச் சாதியினை அனுப்பா விட்டால்
வீடுவீதி எல்லாமே பாழாய்ப் போகும் !
ஆண்பெண்ணாய் இரண்டென்றார் ! இட்டார் ஈயார்
அரும்பண்பில் இரண்டென்றார் தவறு யில்லை
ஆண்பெண்ணில் சாதிபார்த்துத் திரும ணந்தான்
ஆகாதென்று உயிர்பறித்தல் கொடுமை யன்றோ
காண்கின்ற உருவத்தில் சாதி யாலே
கண்களுக்குத் தெரிகிறதா வேறு பாடு
வேண்டாத சாதித்தீ அணைய வைத்தே
வேண்டியநல் ஒற்றுமையில் கைகள் கோர்ப்போம் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.