நினைத்த வேளையில்...
இருபத்தி நான்கு
மணித்துளிகள் கொண்ட
நாளில்
சில நிமிடங்கள்
சிரிக்கலாம் என்றிருந்தேன்.
அகாலத்தில்
வந்த துயரச் செய்தி
என் மகிழ்ச்சிப் பொழுதைக்
களவாடிச் சென்றது.
தொலைக்காட்சி நிகழ்ச்சியில்
குடும்பத்துடன் குதூகலிக்க
நினைத்த வேளையில்...
அப்போது
வந்த அழுகைச் செய்தி
அதை அபகரித்துச் சென்றது.
பின்பொரு நாள்
கதறியழ எத்தனித்திருந்தேன்
அவசர அவசரமாய் வந்த
அல்லல் செய்தி
வழக்கம் போல் எனது
அழுகையை மகிழ்ச்சியென்று
பிடுங்கிச் சென்றது.
இது சந்தர்ப்பமென
சிரித்துக் கொள்கிறேன்.
அந்த மகிழ்ச்சி
என்னில் நிலைத்திருக்க
சிரித்துக் கொண்டே இருக்கிறேன்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.