காதல் எதுவென்று சொல்?

காதல் எதுவென்று சொல் என்றேன்
முதல் நபர்
ஆண் பெண் இணைந்திருப்பது என்றான்
இரண்டாம் நபர்
முத்தமிட்டுக் கொள்வது என்றான்
மூன்றாம் நபர்
காமம் என்றான்
நான்காம் நபர்
காதல் என்றே இவ்வுலகில் எதுவுமில்லை
எல்லாம் எச்சை என்றான்
கருப்புத் தேவதை ஒருத்தி
காதல் எதுவென்று நீயே சொல்லென்று புன்னகைத்தாள்
இச்சையோடு திரியும்
எச்சைக்கெல்லாம் காதல்
துச்சமாகத்தான் தெரியும்
காதலை வகுப்பெடுக்க
நானொன்றும் காதல்தாசனல்ல
வந்தவன் போனவனெல்லாம்
என் உயிர் காதலைக்
குறை சொல்வதைப் பொறுத்துக் கேட்க
நானொன்றும் அமைதிப் புத்தனும் இல்லை
காதல் கட்டிலில் கரையேறுவதும் இல்லை
கரை சேருவதுமில்லை
நித்தம், முத்தம், யுத்தமென்று
மட்டமாய் எதுகை மோனை பேசும்
நாவின் எச்சில், சளிகளுக்கு அப்பாற்பட்டது
விந்து, யோனி என்ற குறி கடந்தது
சாதி, வேதம், கடவுள், மரபு கடந்தது
ஆதிகாலத்துக் காதல்.
குருதியில் வெள்ளை - சிவப்பணுவாய்
ஆணிவேராய் உறையாமல் ஓடும்
சதை - தசை, நிறம், மொழி,
நாடு தாண்டி நிற்கும்
காற்று இந்த பொல்லாத காதல்.
பைத்தியக்காரன் இறுதியாய்ச் சொல்கிறான்
காதல் எதையும் எதிர்பாராது
உன்னைக் காக்கும்
முகமறியாக் கடவுள்
நீ நீயாய், சுயம்புவாய் வாழ வைக்கும்
தேவதை ஆச்சரியத்துடன்
திரும்பக் கேட்டாள்
நீ சொன்ன அந்த அற்புதக் காதல்
எங்கிருக்கிறது என்றாள்?
நேற்று மலர் தூவிப் புதைக்கப்பட்ட
என் கல்லறையைக் காட்டினேன்!
- நௌஷாத்கான். லி, சோழபுரம், கும்பகோணம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.