உறங்கிவிட்டுப் போகட்டும்!

உறக்கம் என்பது வரம் - அது
எல்லோருக்கும் வாய்ப்பதில்லை
சாதாரண மனிதன் வாழ்வில்
பல ஆண்டுகளை உறக்கத்தில்தான்
கழிப்பானாம்...
உறக்கம் புத்தநிலை
சிலருக்குப் போதி மரத்தில் அமர்ந்தாலும்
கிடைக்கப் போவதில்லை
உறக்கம் வேண்டுமா?
கவலைகளை மற,
காசுக்குப் பின் செல்லாதே
மனதில் பாரம் ஏற்றாதே
மகிழ்ச்சியாய் வாழ்
பல நூறு கனவுகள் காணாதே
பாழ்படுத்தும் காதல் கொள்ளாதே
காதுகள் இருந்தும்
செவிடனாய் வாழப் பழகிக்கொள்
தூக்கம் தொலைப்பதற்கு
வன்மையான வார்த்தைகளை
நீ சிலுவைகளாய்ச் சுமந்ததால் கூட இருக்கலாம்
மறதி இருப்பவனுக்கு
தூக்கம் வரப்பிரசாதமாய் அமையும்
இதயத்தில் எதையும் தூக்கி வைக்காதே
நேரத்தின் மீது நம்பிக்கை கொள்ளாதே
கஷ்டத்தை மட்டுமேக் கொடுக்கும் கடவுள் கூட
உன் கண் முன்னேத் தோன்றி
என்ன பிரச்சனை? என்று கேட்டு
உன்னைப் பரிகாசம் செய்யலாம்
நாவிருந்தும் மௌனகுருவாய் இரு
உன் அமைதியைக் கண்டு
அவன் வெறுத்துப் போகட்டும்
உறக்கம் தரும் மாத்திரைகளில்
நம்பிக்கை கொள்ளாதே
எது நடந்தாலும்
அப்படியே ஏற்றுக் கொள்
தேன் உருவாக்கும்
தேனீக்களை உற்றுப் பார்
திருடும் மனிதர்களைப் பற்றி - அது
கவலைப்பட்டதே இல்லை
ஓடும் நதியில் குறுக்கே
கல் விழுந்தாலும் - அது
பாதை தவறுவதில்லை
இரவு வானில் நிலவு ராணி
வலம் வந்தாலும்
விடியலில் சூரியன் உதிக்காமலிருப்பதில்லை
உறக்கம் கிடைக்காத மனிதன்
பாவப்பட்ட பிறவி
ஒரு நாள்
அதிகச் சப்தத்துடன்
அவன் வைத்த அலாரம் ஒலிக்கலாம்
சுற்றியுள்ளவர்கள்
சப்தமிடலாம்
ஒப்பாரி வைத்து ஓலமிடலாம்
கடவுள் ஓரமாய் உட்கார்ந்து
நீலிக்கண்ணீர் வடிக்கலாம்
ஏனோ
அவன் நிம்மதியாய்க் கிடக்கும்
மரண உறக்கத்திலிருந்து மட்டும்
யாராலும் எழுப்ப முடியாது
என் சவாலுக்காக
அவனை எழுப்ப எண்ணாதீர்கள்
பாவம் பைத்தியக்காரன்
கடைசியாய் உறங்கிவிட்டுப் போகட்டும்!!!
- நௌஷாத்கான். லி, சோழபுரம், கும்பகோணம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.