நவீனத்தின் வளர்ச்சி!
உதிர்ந்த சிறகோ
உயிர் வருத்திப் பிடுங்கிய சிறகோ...
மைத்தொட்டு எழுதுகோலாய் எழுதியதும்!
ஒடித்த முள்ளோ
அடித்துத் தட்டித் தட்டி...
நீட்டிய இரும்பு முள் முனையோ...
எழுதுகோலாய் எழுதிய
ஓலைச் சுவடிகள்...
செப்பேடுகள்...
இன்னும் இன்னும்
ஏதேதோ உலோக ஏடுகள்!
உளியோ
உறுதியான கூர்முனைக் கல்லோ...
எழுது கோலாய்
கதை பல சொல்லும்படியான
கல்வெட்டுகள்!
அத்தனையும்
அகழ் ஆராய்ச்சியில்
நிகழ் காலம் உணர்ந்த...
எழுதுகோலின் பயணம்!
உயர்ந்த நாகரீகமென
உலகம் வியந்த ஆதாரங்கள்!
அத்தனையும் ஒதுக்கி
எங்கிருந்தோ
இறக்கிக் கொணர்ந்த...
நெகிழி எழுதுகோல்கள்!
எத்தனை ஆண்டானாலும்
தூக்கியெறிந்ததில்...
குவிந்த குப்பை மலை!
மறுசூழற்சியின்றி
செமித்துப்போகா...
பயனற்ற எழுதுகோலில்
பல்லைக் காட்டுகிறது...
நவீனத்தின் வளர்ச்சி!
- க. மகேந்திரன், தூத்துக்குடி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.